நூற்றாண்டு விழாவை நோக்கி பயணிக்கும் புனித ஜெபமாலை அன்னையின் திருத்தல வரலாறு வேலூர் மறைமாவட்டம் வேட்டவலம் மறைக்கோட்டம் நா.கெங்கப்பட்டு புனித ஜெபமாலை அன்னை ஆலயம் எழுப்பப்பட்டு 92ம் ஆண்டு நிறைவு எய்ததையொட்டி பயணிக்கிறது. “கெங்கை நகரில் வீற்றிருக்கும் தங்தத்தாயே! தரணியில் தவிக்கும் மாந்தர் எமக்கு அடைக்கலம் நீயே! உன்மகன் யேசுவின் பாதையில் எங்களை அனுதினமும் வழிநடத்திடம்மா ஆலயத்தோற்றமும் அருள்தந்தை J.M.அமலதாஸ் அவர்களின் கடின உழைப்பும் பாண்டி – கடலூர் மறைமாவட்டம் அத்திப்பாக்கம் – வேட்டவலம் பங்கிலிருந்து கெங்கப்பட்டில் 25.4.1910 அன்று மறைதிரு.J.F.M.தாராஸ் அடிகள் தற்காலிகமாககோவிலுக்கு அடிக்கல் நாட்டினார். பொது மக்களால் கோவிலுக்கு விடப்பட்ட 5 ஏக்கர் 16 சென்ட் இடத்தை மாதா கோவிலுக்காக வரையறுத்தார்.இவருடைய பணிகள் 7.4.1912 வரை தொடர்ந்து சிறப்பாக நடைபெற்றது. 16.2.1913ல் மறைதிரு ஒ.௩.அமலதாஸ் அடிகள் பொறுப்பேற்றார். அவர் தலைமையில் கட்டுமானப்பணி தொடங்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி மக்கள் அனைவரும் ஒன்று கூடிதலைக்கட்டு வீதம் வேலைகளை பிரித்து கொடுக்கப்பட்டது. சுண்ணாம்புக்கல் வெட்டவும், செங்கல் அறுக்கவும், மண் குவிக்கவும், செங்கல்சூளை சுடவும், கட்டிட வேலை செய்யவும், சுண்ணாம்பு ஆலை ஆடவும் மக்கள் வேலைகளை செய்தனர். முதன்முதலில் பங்குத்தந்தைக்கு அறைவீடு கட்டப்பட்டது.பங்குத்தந்தை இல்லத்தில் இறைவழிபாடும், 14.8.1924 ல் ஆர்.சி.எம்.ஆரம்பப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டு முதன்முதலில் அந்தோணி என்பவர் ஆசிரியராக பணிபுரிந்தார். இவரிடத்தில் பயிற்சிபெற்ற மாணவர்களை மறைதிரு.கவான்டப்பி அவர்கள் தண்டரை, மதுராம்பட்டு முதலான பள்ளிகளுக்கு ஆசிரியர்களாக பணியாற்ற அனுப்பிவைத்தார். மறைதிரு. அமலதாஸ் அடிகள் ஒத்துழைப்பாலும், பொதுமக்கள் ஒத்துழைப்பாலும் 16 ஆண்டுகளுக்கு பிறகு 1930 ல் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது.முதல் பங்குத்தந்தையாக மறைதிரு.அமலதாஸ் அடிகள் பணியாற்றினார்.கீழ்நாத்தூர், கண்ணப்பந்தல், கச்சிராப்பட்டு, பாப்பாம்பாடி, வேளானந்தல், செல்லங்குப்பம், தண்டரை, பவித்திரம், சாணிப்பூண்டி, அரும்பாக்கம், பொலக்குணம், சோமாசிபாடி ஆகிய 12 கிளைப்பங்குகளை கொண்டது. இதில் கீழ்நாத்தூர் தனிப்பங்காகவும், மற்றும் சாணிப்பூண்டி. கூடலூர் பங்கிலும், அரும்பாக்கம், பொலக்குணம் சோமாசிபாடி பங்கிலும், தண்டரை மதுராம்பட்டு பங்கிலும், கண்ணப்பந்தல், கச்சிராப்பட்டு, பவித்திரம் பங்கிலும் இணைந்துள்ளது. 1931-1933 வரை அருட்திரு.கிரேவர் அவர்கள் பங்குத்தந்தையாக பணியாற்றினார். நா.கெங்கப்பட்டு பங்கில் கிறிஸ்தவ மக்கள் 410 தலைக்கட்டுகளும் 3000 ஜனத்தொகையும் கொண்டது. 26.5.1933 முதல் 9.5.1950 வரை அருட்திரு.டெகுரைட்டர் பங்குத்தந்தையாக பணிபுரிந்தார். இவர் ஆலயத்தின் முன்பு 65 அடிஉயரமுள்ள கோபுரத்தை கட்டினார். இந்த ஆலயமானது திவ்விய நற்கருணை ஆலயம் என பெயர் சூட்டி புதுவை கடலூர் ஆயர் மோரியல் அவர்களால் திருநிலைப்படுத்தப்பட்டது. பின்பு 1933ல் கோவில் வளாகத்தில் உள்ள கிணற்றை வெட்டினார்.
மறைதிரு டெகுரைட்டர் அவர்கள் 17 ஆண்டுகள் பணிபுரிந்தார். இவர் விடுமுறையில் ஆலந்து தேசத்திற்கு செல்வது வழக்கம். இந்த விடுமுறை நாட்களில் அருட்திரு.பாக்கியநாதன் 13.10.1935 முதல் 20.10.1936 வரை பணிபுரிந்துள்ளார். 21.10.1936 முதல் 25.1.1937 வரை அருட்திரு. எம்மானுவேல் பணிபுரிந்துவந்தார். 29.9..1940 முதல் 28.1.1942 வரை அருட்திரு.பிலிப்புத்தூரா அடிகள் பணிபுரிந்துள்ளார். 5.3.1945ல் இருந்து 25.3.1945 வரை அருட்திரு.மரியதாஸ் அவர்கள் பணிபுரிந்துள்ளார். 15.5.1946 லிருந்து 9.7.1947 வரை அருட்திரு.குரியாக்கோஸ் பணிபுரிந்தார். 1949 முதல் 1959 வரை நீலப்பனார் அடிகள் பொறுப்பேற்று பங்கினை சீரும் சிறப்புமாக நடத்தினார். கெங்கப்பட்டிலிருந்து நாடழகானந்தல் செல்லும் பாதையை சாலையாக அமைத்தார். 1951 ல் ஆர்.சி.எம். துவக்கப்பள்ளியை அரசு ஆணையுடன் நடுநிலைப்பள்ளியாக உயர்த்தினார். நடுநிலைப்பள்ளிக்கான பள்ளிக்கட்டிடத்தை பொதுமக்கள் உதவியுடன் கட்டிமுடித்தார்.1959 முதல் 1968 வரை மறைதிரு. வி.பி.அந்தோணிசாமி அடிகள் பணியாற்றினார். திவ்வியநற்கருணை ஆலயம் என்ற பெயரினை புனித ஜெபமாலை அன்னை ஆலயம் என பெயர்மாற்றினார். அதிலிருந்து வருடாவருடம் அக்டோபர் 7ம்தேதி புனித ஜெபமாலை அன்னை ஆலயஆண்டுத்திருவிழா கொண்டாடப்பட்டு வருகின்றது. பாண்டி கடலூர் மறைமாவட்டத்திலிருந்த பங்குவேலூர் மறைமாவட்டத்திற்கு மாற்றப்பட்டது.1968 முதல் 1975 வரை மறைதிரு.ஏ.டி.தாமஸ் அவர்கள் பங்குத்தந்தையாகவும் அவருக்கு உதவிபங்குத்தந்தையாக மறைதிரு.எல்.எம்.அருள் அவர்களும் பணியாற்றினார். பொதுமக்கள் உதவியுடன் உயர்நிலைப்பள்ளி கட்டிடத்திற்காக வாங்கிய இடத்தினை புனித ஞானபிரகாசியார் கன்னியர் மடத்தினருக்கு தானமாக கொடுத்தனர். அந்நிலத்தில் கன்னியர் மடமும், புனித தோமையார் மருத்துவமனையும் கட்டப்பட்டது.1975 மார்ச் முதல் 1977 அக்டோபர் வரை அருட்திரு. முத்துக்கட்டில் அடிகள் பங்கினை கவனித்து வந்தார். இவர் வெளிநாடு சென்ற போது அருட்திரு.துரைசாமி நாரலா அவர்கள் 3 மாதகாலம் பணியாற்றினார். 1977 முதல் 1979 அக்டோபர் வரை பணியாற்றிய அருட்பணி ஜான்போஸ்கோ அவர்களால் கோவில் வளாகத்தில் உள்ள மேநீர் தேக்கத்தொட்டியானது கட்டப்பட்டது. 1979 முதல் 1981 மே வரை மறைதிரு.வில்பர்ட்தானியேல் அவர்கள் பணியாற்றினார்.1981 முதல் 1984 ஜூலை வரை அருட்திரு.ஜான்சன் அவர்கள் பணியாற்றினார்.அவரது சிறப்பான ஜெபவழிபாடுகளால் பேய்கள் ஓட்டப்பட்டன. வடக்கு பக்கம் உள்ள கெபியில் புனித ஜெபமாலை அன்னை சுரூபத்தை நிறுவி வழிபாடு நடக்க வழிசெய்தார். ஆலய பொன்விழாவை சிறப்பாக நடத்தினார்.1984 முதல் 1994 வரை அருட்திரு.வனத்தையன் அடிகளார் பங்குத்தந்தையாகவும், அருட்திரு அந்தோணிபுத்தன், அருட்திரு. ஏசுரத்தினம் உதவிகுருக்களாகவும் பணியாற்றினார்கள்.கோவிலின் மூன்று புறமும் விரிவுபடுத்தி கட்டினார். தெற்குபக்கம் உள்ள கெபியினை கட்டி வழிபாடு நடக்க வழிசெய்தார்.1995 ஜூன் முதல் 1997 ஆகஸ்ட் வரை அருட்தந்தை பால்ராஜரீகம் அவர்கள் பணிபுரிந்தார். நடுநிலைப்பள்ளியை புனித சின்னப்பர் உயர்நிலைப்பள்ளியாக உயர்த்தினார். அதற்கு தேவையான ரூ.1.85.000 பணத்தை பொதுமக்களிடம் இருந்து நன்கொடை மூலம் பெற்று கட்டினார்.
10.4.1996 ல் உயர்நிலைப் பள்ளியின் பழைய கொட்டகையை பிரித்து மெத்தையாக கட்டினார். 1997 ஆகஸ்ட் முதல் 2000 மே வரை பணியாற்றிய அருட்தந்தை பன்னீர்செல்வம் அவர்கள் தொடக்க பள்ளி கட்டிடத்தையும், உயர்நிலைப் பள்ளியின் கலைஅரங்கத்தையும், பங்குத்தந்தையர் குடியிருப்பு இல்லத்தையும் கட்டி பங்கிற்கு பெருமை சேர்த்தார். 2000 ஜூன் மாதம் பணியினைத் தொடங்கிய அருட்பணி.ஜே.இருதயராஜ் அவர்கள் பங்கிற்கு சமுதாய கட்டிடம் கட்ட 10.1.2003 ல் முன்னாள் வேலூர் ஆயர் மேதகு.ஏ.எம்.சின்னப்பா அவர்களால் அடிக்கல் நாட்டினார். சமூதாயக்கூடத்தை கட்டிமுடித்து 3.5.2005 செங்கல்பட்டு ஆயர் மேதகு நீதிநாதன் தலைமையில் திறந்து வைத்தார். மேலும் பள்ளியில் கணிணி கற்பிக்க அறையை கட்டி, அதற்கு ஆசிரியரையும் நியமித்தார். பழம்பெருமை வாய்ந்த ஜெபமாலை அன்னை ஆலயத்தினை மேதகுஆயர் ஏ.எம்.சின்னப்பா அருட்திரு.ராய்லாசர் மற்றும் வெளிநாட்டவர் நன்கொடைகளாலும், பங்கின் கிறிஸ்தவ மக்களின் நன்கொடையாலும், பேராதரவாலும் புதுப்பிக்கப்பட்டு வேலூர் மறைமாவட்ட ஆயர் மேதகு சௌந்தரராஜு அவர்களால் திருநிலைப்படுத்தப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. 2007 மே முதல் நமது பங்கினை வழிநடத்த அருட்திரு.எஸ்.ஜேக்கப் அடிகளார் அவர்கள் பொறுப்பேற்றார். இவர் கோவில் வளாகத்தில் உள்ள அந்தோணியார் கெபி, மாதா கெபி. போன்றவற்றினை புதுப்பித்து வழிபாடுகள் நடக்க வழிசெய்தார். புனித ஜெபமாலை அன்னை ஆலய பவளவிழாவினை பார்போற்றும் வகையில் சிறப்பாக நடத்தினார். அன்னையின் புகழ்விளங்க, வரம் அருள சிரம் தாழ்த்தி, கரம் குவித்து அன்னையை வணங்குவோம்.